பிகில் படத்தின் சம்பளமாக நடிகர் விஜய் 30 கோடி பெற்றதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை முதல் வருமானத்துறையினர் AGS நிறுவனத்தின் வீடு , அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சுமார் 200 அதிகாரிகள் பங்கேற்ற இந்த சோதனை நடிகர் விஜய்யையும் விட்டு வைக்கவிலை. பிகில் படத்தில் நடித்ததற்காக ரூ 50 கோடி வாங்கினார் என்ற தகவலை தொடர்ந்து நடிகர் விஜயை விசாரிக்க, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற அதிகாரிகள் அங்கு விஜயிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு படப்பிடிப்பும் நிறுத்தபட்டது.
இதையடுத்து நடிகர் விஜயை நேற்று சென்னைக்கு அழைத்து வந்து பனையூர் வீட்டில் வைத்து விசாரணை செய்தனர். அதே நேரம் நடிகர் விஜயின் சாலிகிராமம் , நீலாங்கரை இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவந்த நிலையில், இன்று இரண்டாம் நாளாக இந்த சோதனை தொடர்ந்தது. தொடர்ந்து விஜயிடம் 18 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பிகில் படத்தின் சம்பளமாக 30 கோடி அவர் பெற்றதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விஜயின் மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் இன்று காலை 65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது .சென்னையில் உள்ள வீட்டில் 50 கோடியும் , மதுரை வீட்டில் 15 கோடியும் கைப்பற்றப்பட்ட்தாக வருமான வரித்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.மேலும் பைனான்சியர் அன்புச்செழியன் நண்பரான சரவணன் வீட்டிலிருந்து 15 கோடி பணம் கணக்கில் வராததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்