பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்ற சொத்து அறைகளில் உள்ள மதுபானங்களை அளிப்பது குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிக வளாகங்கள், பெரிய கடைகள், ஷாப்பிங் மால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கட்டுமான பணிகள் முடங்கின.
மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2ம் கட்டமாக ஊரடங்கு 38வது நாளாக அமலில் உள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் எந்த டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கள்ளச்சாராயம் விற்பனை, மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை போன்றவை அரங்கேறி வருகிறது.
இதனை தடுப்பதற்காக கலால் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுவரை பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு அந்தந்த சார்பு நீதிமன்றங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் திருடப்படுவதாகவும், அதனை முறையாக அழிக்க வேண்டும் எனவும் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னதாக வேடசந்தூரில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை திருட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அளிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். அப்படி மதுபானங்களை அழிப்பதாக முடிவெடுக்கையில் வழக்கின் விசாரணை அதிகாரி முன்பாகவே மதுபானங்களை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுபாட்டில்களை அழிக்கும் போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.