உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 நிமிடத்தில் ஒரு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திருமணத்தில் மணமகன் கேட்ட வரதட்சனை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவு உறவினர்களைக் கொண்டு திருமணத்தை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகள் 17 நிமிடங்களில் திருமணம் ஒன்றை நடத்தி முடித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மணமகன் புஷ்பேந்திர துபே மற்றும் மணமகள் பிரீத்தி திவாரி ஆகியோர் குடும்ப உறுப்பினர்களை மட்டும் அழைத்து கோவிலை ஏழு முறை சுற்றி வந்து 17 நிமிடத்தில் திருமணத்தை முடித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் மணமகன், மணமகள் தாயாரிடம் ஒரே ஒரு ராமாயண புத்தகத்தை மட்டும் வரதட்சணையாக கொடுக்குமாறு கூறிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அதிக வரதட்சணை வாங்கி ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில், வரதட்சணை எதுவும் வாங்காமல் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.