பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யாஷிர் ஷா மீது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் யாஷிர் ஷா என்ற சுழற்பந்து வீச்சாளர் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் வருடத்தில் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது வரை சுமார் 46 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் மிகக்குறைவான போட்டிகளில் பங்கேற்று, விரைவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதாக உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் காவல் நிலையத்தில், யாசிர் ஷா மீது 14 வயது சிறுமி புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷாவின் நண்பரான பர்கான் என்னை துப்பாக்கியை வைத்து மிரட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
அதனை வீடியோ எடுத்து என்னை மிரட்டினார். எனவே, அவரின் நண்பர் யாஷிர் ஷாவை, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறினேன். அவர் என்னை நக்கல் செய்து சிரித்தார். மேலும் இது தொடர்பில், உயர் அதிகாரிகளிடம் கூறக்கூடாது என்றும், எனக்கு செல்வாக்கு கொண்ட நபர்களையும், மேலதிகாரிகளையும் நன்கு தெரியும் என்றார்.
மேலும், நீ புகார் அளித்தால், உன் வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டினார். எனவே, இவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.