அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக ஜோ பைடன் 80 மில்லியன் வாக்குகளை பெற்று வரலாறு படைத்துள்ளார்.
நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானதில் இருந்து ஜோ பைடன் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பை விட முன்னிலை வகித்தார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, முறைகேடுகள் என அடுத்தடுத்து குற்றசாட்டுகளை அதிபர் டிரம்ப் முன்வைத்தார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியும் முழுமையாக முடியாத நிலையில் தற்போதுவரை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. இதில் ஜோ பைடன் 80 மில்லியன் வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தத் தேர்தலில் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தாலும்… தோல்வியடைந்த வேட்பாளர்களிலேயே அவர் தான் அதிக வாக்குகளை பெற்றவராக விளங்குகிறார்.
இதுவரையில் அறிவிக்கப்பட்ட முடிவில் 155 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன. இதில் டிரம்ப்பை விட ஜோ பைடன் ஆறு மில்லியன் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார். தற்போதைய நிலையில் 290 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடனும், 232 தேர்தல் சபை வாக்குகளை டிரம்ப்பும் பெற்றுள்ளனர். ஜார்ஜியா மாகாணத்தில் முடிவு முழுமையாக சேர்க்கப்படும்போது ஜோ பைடன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி 306 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.