வீட்டில் கதவு தட்டும் சத்தத்தை கேட்டு திறக்க சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள Colindale நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை உட்பட ஆண், பெண் மூவரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த வீட்டின் கதவை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் தட்டியுள்ளார். இதனை அடுத்து வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்த போது மர்ம நபர் அவர்களின் மீது ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து மூவரும் வலியால் துடித்த சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மூவரும் வீடு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை விசாரித்து வருகின்றனர்.