செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற கட்சியினுடைய துணை தலைவராக, அனைத்திந்திய அண்ணா திராவிட பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அதை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சட்டப்பேரவை தலைவருடன் திரு.உதயகுமார் அவர்களை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும், திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை துணைச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டு, சுமார் இரண்டு மாத காலம் ஆகிறது.
பிறகு நினைவூட்டு கடிதம் இரண்டு முறை சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் சட்டமன்ற பேரவை தலைவரிடம் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் சரியான முடிவு எடுக்கவில்லை. நாங்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஏற்கனவே துணைத்தலைவராக இருந்தவரே தொடர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்கள். அந்த இருக்கையிலே அமர வைத்திருக்கின்றார்கள்.நியாயமாக நடுநிலையோடு செயல்படக்கூடிய சட்டப்பேரவை தலைவர் அவர்கள் தற்போது அரசியல் ரீதியாக செயல்படுவதாக நாங்கள் பார்க்கின்றோம்.
சட்டமன்றம் என்பது வேறு, கட்சி என்பது வேறு. ஒரு சட்டமன்றத்திலே அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதுதான் நடைமுறை. அதே போல சட்டமன்ற எதிர்க்கட்சியில் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி யாரை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கின்றார்களோ, எதிர்க்கட்சியின் பல்வேறு பொறுப்புகளை தேர்ந்தெடுக்கின்றார்களோ, அவர்கள்தான் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவது மரபு. ஆனால் அந்த மரபு மாண்பு சட்டமன்றத்திலே நிராகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் நாங்கள் நீதி கேட்டோம்.
எங்களுடைய மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், இது குறித்து காலை 9:15 மணி அளவில் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்திற்கு சென்று, எங்களுடைய கருத்துக்களை நியாயமாக தெரிவித்தோம். அதன் அடிப்படையில் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத்தலைவர், துணைச் செயலாளரை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். ஆனால் அதற்கு முறையான பதில் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.
அதற்கு மாறாக சட்டமன்றத்திலே கருத்தை தெரிவிக்கின்றார். அது மட்டுமல்லாமல் பேரவை அவை தலைவர் எழுந்து, கேள்வி நேரம் முடிந்ததும் நீங்கள் செல்லலாம் என்று சொல்கிறார். அப்படி என்றால் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் உடைய ஆலோசனைப்படி தான் சட்டப்பேரவை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். இல்லாவிட்டால் அந்த கருத்தை ஏன் அவை தலைவர் சட்டமன்றத்தில் குறிப்பிடுகிறார் என தெரிவித்தார்.