கிருஷ்ணகிரியில் தேவையின்றி வெளியே நடமாடிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவை இல்லாமல் வெளியே நடமாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி சிலர் வெளியே சுற்றி வந்தனர்.
அவர்கள் மீது காவல் துறையினரும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில நாட்களாகவே பொதுமக்கள் அதிக அளவில் வெளியே உலாவி வருவதாகவும், இரு சக்கர வாகனத்தில் சுற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அதேபோல் காலை நேரங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறிகள், மளிகை கடைகளில் கூட்டம் கூடுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதை தவிர்க்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதன்படி, வெளியே தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.