தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வு குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடுமுழுவதும் நாளையோடு மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டது. இதில் பல்வேறு அம்சங்களுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசாங்கம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை, திறந்தவெளி திரையரங்கம் அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு தடை விதித்துள்ளது. அதேபோல ஊரடங்கு குறித்து முடிவுகளை மத்திய அரசின் ஆலோசனை பெறாமல் மாநில அரசு மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்திலும் நான்காம் கட்ட தளர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறி முறையை சார்ந்தே இருக்கும்.
இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்திய நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு எந்த மாதிரி இருக்கும் என்று அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ- பாஸ் முறை ரத்து செய்யப்படலாம் என்று சொல்லப்படுகின்றது.