பிரபல குணச்சித்திர நடிகர் பாலாசிங் (67) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவ மனையில் இன்று அதிகாலை காலமானார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினமே உடல்நிலை மிக மோசமானதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
நடிகர் பாலாசிங் தமிழில், நடிகர் நாசர் இயக்கி நடித்த ‘அவதாரம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். கன்னியாகுமரியைச் சேர்ந்த இவர் 1983ஆம் ஆண்டு வெளியான ‘மலமுகளிளே தெய்வம்’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும், தமிழில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.
இந்தியன், ராசி, உல்லாசம், இரணியன், விருமாண்டி, தீனா, புதுப்பேட்டை, முனி, குரங்குபொம்மை, சமீபத்தில் வெளியான என்ஜிகே, மகாமுனி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.இவரது மறைவு தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகப் பிரபலங்கள் பாலாசிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.