இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்ற தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்படும் மக்கள், அதேபோல பொது வெளியில் உணவின்றி தவிக்கும் மக்கள் மற்றும் சாலையோரத்தில் வாசிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண நிதியாகவும், உணவுப்பொருட்களையு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் வழங்க அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்பினரும் நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையர் , நகராட்சி ஆணையரிடம் தரலாம். சில நபர்கள், அரசியல் கட்சிகள், கட்சியினர் நேரடியாக பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயல். அரசின் உத்தரவை மீறி நிவாரண பொருட்கள் வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா” தடுப்பு நடவடிக்கையில்… மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது… அதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்!
அதேசமயம்… “இந்த கொரோனா” ஊரடங்கினால் சரிவர பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு… இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்! ஏனெனில் அரசாங்கமே கடைநிலை பகுதிவரை அனைவருக்கும் உணவு பொருட்களை தந்திட இயலாது என்பதே எதார்த்தம்”! என்று குறிப்பிட்டுள்ளார்..
இதோ அந்த முழு அறிக்கை….
— Raghava Lawrence (@offl_Lawrence) April 12, 2020