தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் (30ஆம் தேதி) நேரில் சென்று ஆறுதல் கூறினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த், காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியது, வாகனங்களுக்கு தீ வைத்தது மற்றும் வன்முறையில் ஈடுபட்டது மக்கள் அல்ல, சமூக விரோதிகள் எனக் கூறிவிட்டு, அவர்கள் யாரென்று எனக்கு தெரியும் என்றார்.
மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாள் சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை திசை திருப்ப முயன்றார்களோ, அதேபோல இந்த போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்துள்ளனர் என்று பேசினார். அவர்கள் யாரென்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு நான் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன் என்று கூறி விட்டார். ரஜினியின் இந்த கருத்து தான் சர்ச்சையை ஏற்படுத்தி விசாரணை ஆணையம் வரை சென்றுவிட்டது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 18 கட்ட விசாரணை முடிந்துவிட்ட நிலையில், 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 10 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்ட விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 3-ஆவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் காவல் துறை அதிகாரிகள், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் தடயவியல் வல்லுநர்கள், மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட இருக்கின்றனர். இந்தநிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வரும் பிப். 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அந்த சம்மனில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த கலவரம் பற்றி தங்களுக்கு தெரிந்தவற்றை கூறுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு சம்மன் அனுப்பட்டுள்ள நிலையில் ரஜினிக்கு அனுப்பப்பட்டுள்ளது.