அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை நான் வைத்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த விளக்கமாக கூறியுள்ளார்.
சென்னை லீலா பேலஸ் விருந்தினர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போதைய கால கட்டத்தில் ஒரு அரசியல் மாற்றம் கண்டிப்பாக வேண்டும். சிஷ்டம் சரியில்லை, அரசியல் மாற்றத்திற்கு படித்தவர்கள், இளைஞர்கள் முன் வர வேண்டும்.சாக்கடையென்று விலகி செல்ல கூடாது. அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை நான் வைத்துள்ளேன்.. அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.
திட்டம் 1 : தேர்தலின் போது பல பதவிகள் கொண்டுவரப்படும். அவற்றில் பல கட்சி நிர்வாகிகள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பின் அத்தனை பதவிகளும் தேவைப்படாது. அதை தேர்தலுக்கு பின் அகற்ற வேண்டும். தேவையான கட்சி பதவிகள் மட்டுமே இருக்க வேண்டும். தற்போது சிலர் தொழிலுக்கு செல்லாமல் அதையே (பதவி) தொழிலாக முன்னிறுத்தி கொள்கின்றனர். ஆகவே முதலில் தேவையான பதவிகளை வைத்து விட்டு தேவையில்லாத பதவிகளையெல்லாம் தூக்கி ஏறிய வேண்டும்.
திட்டம் 2 : இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் பெரும்பாலான கட்சிகளில் முதியவர்களே பதவியில் இருக்கின்றனர். அப்படி இல்லாமல் 60- 65 சதவீதம் படித்தவர்கள், இளைஞர்கள், ஏரியாவில் மக்கள் மனதில் நல்ல பெயர் பெற்றவர்களுக்கு நான் சீட் கொடுப்பேன். மீதி ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சீட் கொடுப்பேன் என்று கூறி, அதுபோன்றவார்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.
திட்டம் 3 : கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒருதலைமை என்பதே எனது முடிவு. முதல்வர் பதவிக்கு வருவதை நான் நினைத்து கூட பார்த்தது கிடையாது. நான் ஒரு பழமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறன். எல்லா துறைகளிலும் உள்ள வல்லுநர்களை வைத்து குழு அமைக்கிறோம். பதவிக்காக வருபவர்கள் தன்னுடன் வரவேண்டாம். பொது சேவை செய்வதற்க்காக வருபவர்கள் வரட்டும் என்பதே எனது கொள்கை என்று விளக்கமாக கூறினார்.