பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
நேற்று மாலை சரியாக 6 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் கோலாகல இசை வெளியீட்டு விழா தொடங்கியது. ஆனால் ரசிகர்கள் மதியம் 2 மணிக்கே வரத்தொடங்கினர். குறிப்பாக நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பட குழுவினர் அனைவருமே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.
இந்நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த குட்டி ஸ்டோரியை சொன்னார். அதன் பிறகு அரசியல் பற்றிய கருத்தையும் நடிகர் விஜய் சொல்வார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் நடிகர் விஜய் அரசியல் பற்றி எதுவுமே பேசவில்லை. கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் மேடையில் மறைமுகமாக அரசியல் பேசினார். ஆனால் தற்போது மறைமுகமாக கூட அரசியல் பற்றி விஜய் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. ஒருவேளை வாரிசு திரைப்படம் குடும்ப கதையம்சம் கொண்ட படம் என்பதால் அரசியல் கருத்தை விஜய் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுக்காக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது.