சென்னையில் உள்ள நடிகர் விஜய்சேதுபதி அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக பிரபலமான நடிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். அதை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்கின்றார்கள். ஒரு மாதத்திற்கு முன்னதாக மண்டி என்ற ஆன்லைன் செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மண்டி என்ற செயலியை பிரபலப்படுத்த நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த மண்டி என்ற செயலியானது வணிகர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக வணிகர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வணிகர் பேரமைப்பு சார்பாக சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய விஜய்சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வணிகர்கள் அறிவித்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தி கொண்ட வணிகர்கள் வளர்க்காதே..!! வளர்க்காதே…!! ஆன்லைன் வர்த்தகத்தை வளர்க்காதே என்ற கோஷத்தை முனங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் விஜய் சேதுபதி உடனடியாக மண்டி செயலியை விளம்பரப்படுத்தும் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.