தெலுங்கு சின்னத்திரை நடிகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கு சின்னத்திரை நடிகையான சாந்தி என்கிற விஷ்வா சாந்தி சீரியலில் நடிப்பது மட்டுமன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். ஹைதராபாத்தில் இருக்கும் எல்லரெட்டிக்குடா என்ற பகுதியில் காலனி ஒன்றில் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இவர் சில தினங்களாக வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் எஸ் ஆர் நகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சாந்தியின் வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டிற்குள் மர்மமான முறையில் சாந்தி இறந்து கிடந்தார். அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சாந்தியின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் வீட்டின் முன்புறம் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறையில் மதுபாட்டில் இருந்ததாலும் சாந்தியின் தலையில் அடிபட்டு இருந்ததாலும் அவர் குடிபோதையில் விழுந்து மரணமடைந்தாரா என்னும் கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.