தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ’காதல் கதை’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி பின் அரவிந்த் சாமியுடன் என் சுவாச காற்றே, நடிகர் விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்த்துடன் நரசிம்மா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.அதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற இவர் பிஞ்சார் மற்றும் ஷாருக்கானின் டான் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.
இதனிடையே நடிகை இஷா பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நடைபெற்ற கசப்பான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ’எனக்கு 15 வயது இருந்தபோது தயாரிப்பாளர் ஒருவர் என்னை பிரபல நடிகரிடம் பேசுமாறு கூறினார். அவ்வாறு பேசினால் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
அப்போது நான் அந்த நடிகரை தொடர்பு கொண்டபோது அவர் என்னை தனியாக வருமாறு கூறினார். நான் நாளை கூறுகிறேன் என்று கூறிவிட்டு அந்த அழைப்பை துண்டித்துவிட்டேன். பின்னர் அந்த தயாரிப்பாளரிடம் திறமைக்கு மட்டும் மதிப்பளியுங்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடவைக்க முயற்சிக்காதீர்கள் என்று கடுமையாக கூறினேன்.
பின்னர் அந்த தயாரிப்பாளருடனும், அந்த நடிகருடனும் எந்தப் படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை. இதனால் பல பட வாய்ப்புகளையும் இழந்தேன். அந்த நடிகர் தற்போது பிரபல நடிகராக உள்ளார். பலமுறை பல பிரபலங்கள் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றனர் என்றார்.