சிம்பு நடிப்பில் 2004இல் வெளியான ‘குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா. தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அபி என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகப் பயணத்தை தொடங்கிய இவர், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த ரம்யா, 2011க்குப் பிறகு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
இரண்டு முறை சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ள ரம்யா, திரைத்துறைக்கான கர்நாடக மாநில அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.
இதனிடையே இன்று ரம்யா தனது 37ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இளம் வயதிலேயே திரையுலகிலும், அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்ற அடையாளத்தை முத்திரைப் பதித்திருக்கும் நடிகை ரம்யாவுக்கு நாம் அனைவரும் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவிப்போம்..!