தமிழ்த் திரையுலகில் சமீபகாலமாக நாயகிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை தமிழ்த் திரையுலகில் அதிகரித்துவருகிறது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் பெரும்பாலானவை ஆக்ஷன் படங்களே ஆகும்.
அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவிருக்கிறார். இதற்காக அவர் சிறப்புச் சண்டை பயிற்சிகளை எடுத்துவருகிறார். இந்தப் படத்தை ‘களிறு’ படத்தை இயக்கிய ஜி.ஜே. சத்யா இயக்கவுள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் படம் குறித்து இயக்குநர் சத்யா, “பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப்படச் செய்தார் என்றால் மிகையாகாது. அந்த மன உறுதியும் திடமும் என் கதையின் நாயகி அவரே என தீர்மானிக்க உதவியது. அவரை அணுகியபோது சற்றே தயங்கினாலும் பின்னர் முழு மனதுடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.
நாயகியின் பாத்திரத் தன்மைக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு தன் திறமையை மெருகேற்றிவருகிறார் சாக்ஷி அகர்வால். கதைக்கு ஏற்ப சில தலைப்புகளை நாங்கள் பரிசீலனை செய்துவருகிறோம். இன்னும் சில நாள்களில் ஒரு சிறப்பான தலைப்பை வெளியிடுவோம். இந்தப் படத்தில் மேலும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. விரைவில் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்களையும் வெளியிடுவோம்” எனத் தெரிவித்தார்.