உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இராணுவ படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரியளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. அதே சமயத்தில் உக்ரைனில் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. அந்த வகையில் உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா போன்ற 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவிடமிருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ரஷ்ய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இந்நிலையில் ரஷ்ய ராணுவம் போரில் தற்போது வேகமாக முன்னேறி உக்ரைனின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை கைப்பற்றி வருகின்றது. குறிப்பாக உக்ரைனிலுள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவம் தாக்கி வருகின்றது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரியளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.