மாமல்லபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள குதிரைக்காரர் வீதி பகுதியில் பத்மினி என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் சங்கு,மணி மற்றும் துப்பட்டா ஆகியவற்றை சாலையோரம் போட்டு விற்பனை செய்து வருகின்றார். இவரின் இளைய மகன் முரளி (37)கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு முரளி தாய் பத்மினி இடம் பணம் கேட்டுள்ளார்.
ஏற்கனவே மகன் கஞ்சா போதையில் இருந்ததால் பணம் தர அவர் மறுத்துள்ளார். இதனால் தாயை கண்மூடித்தனமாக தாக்கி வயிற்றில் மிதித்துள்ளான்.கஞ்சா போதை கண்ணை மறைத்ததால் தாய் என்றும் பாராமல் மீண்டும் அருகில் இருந்த கட்டையை எடுத்து பத்மினி தலையில் கடுமையாக தாக்கியுள்ளான்.வலி தாங்க முடியாமல் கதறி கூச்சலிட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் முரளி மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில் தாய் இறந்தது கூட தெரியாத அளவிற்கு போதையுடன் அதே பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.