அரியலூரில் டாஸ்மார்க் கடையை மூட கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ளது உடையவர் தீயனூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவின்பேரில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டபோது, விக்கிரமங்கலத்தில் இருந்த டாஸ்மாக் கடை உடையவர் தீயனூர் மாற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையானது செங்குழி பெருமாள், தீயனூர் மலை மேடு பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது.பொதுமக்கள் இதனால், இப்பகுதிக்கு பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் டாஸ்மாக் கடையில் குடிப்பவர்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மேலும் தாய்மார்கள் பலர் தங்களது கணவரை இழந்து தவித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் சிலரும் போதைக்கு அடிமையானதால் கடையை மாற்றக் கோரி தீயனூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெகுண்டெழுந்த அக்கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி மோகன்தாஸ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் டாஸ்மாக் கடையை அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.இதனையடுத்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் மக்களிடம் தெரிவித்த பின்னரே சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.