சென்னையில் ஆசையாக வளர்த்த பூனை ஒன்று கர்ப்பம் அடைந்த நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்தி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை, பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதிகுமார். இவர் தனது நாய் மற்றும் பூனைகளை பாசத்துடன் வளர்த்து வருகிறார். தற்போது அவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலைமையில் இருக்கிறது. இதனால் அப்பூனைக்கு வளைகாப்பு நடத்த ஜோதி முடிவு செய்துள்ளார். பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல பூனைக்கும் வளைகாப்பு நடத்த அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்பின் பூனையை பெண் போல அலங்கரித்து, அதற்கு முன்பு தட்டுக்களை வரிசையாக வைத்தனர். அதனைதொடர்ந்து பூனைக்கு மிகப் பிரியமான நண்டு, மீன், இறால், உள்ளிட்ட அசைவ உணவுகளையும், ஏழு விதமான கலவை சாதனங்களையும் வைத்து, ஒரு நாற்காலியின் மேல் பூனையை உட்கார வைத்தனர்.
பின்பு வண்ண வண்ண வளையல்களை உறவினர்கள் பூனையின் கால்களில் போட்டனர். அவர்களது குழந்தை போல நினைத்து பூனைக்கு வளைகாப்பு நடத்தி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.