தற்கொலை செய்து கொண்ட யூனியன் அலுவலக அதிகாரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள நன்னகரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வட்சன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் முக்கூடலில் ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்திற்கு வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் விரைந்து சென்று ராதாகிருஷ்ணனை உடனடியாக மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சக ஊழியர்கள் முக்கூடல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முக்கூடல் காவல்துறையினர் ராதாகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேரன்மகாதேவி காவல்துறையினர் பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்திற்கு சென்று அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களிடம் ராதாகிருஷ்ணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த ராதாகிருஷ்ணனின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது மருத்துவமனைக்கு வெளியில் திரண்ட ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் அவரின் உடலை வாங்க மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ராதாகிருஷ்ணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் ராதாகிருஷ்ணனின் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் ராதாகிருஷ்ணனின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுச் சென்றுள்ளனர்.