பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக கட்சி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் தான் எப்போதும் நடைபெறுமென கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி உள்ள கண்மாய் பகுதியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற உள்ள குடிமராத்து பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக ஒரு குடும்ப கட்சி. அதில் வாரிசு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு தற்போது கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிறார். திறமையே இல்லாத மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக இருக்கிறார். திமுக கட்சியினரிடம் எத்தகைய ஒற்றுமையும் இல்லை. மேலும் கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றது அவருடைய விருப்பம். எங்களது கருத்துக்களை ஏற்று அதிமுகவிற்கு திமுகவினர் யார் வந்தாலும் முழு மனதுடன் வரவேற்போம். எடுத்துக்காட்டாக பாஜகவின் நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தால் கூட வரவேற்று கொள்வோம்.
தேர்தலுக்காக தகவல் தொழில்நுட்ப பிரிவு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அதிமுக கட்சி எப்போதும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் தான் நடைபெறும். அதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் கிடையாது. தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றாக கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தடுப்பு பணியில் இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சசிகலா பற்றி எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுக மிகப்பெரிய வலுப்பெறும்” என்று அவர் கூறியுள்ளார்.