அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் குடும்பம் குடும்பமாக வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருக்கின்றது. அதேபோன்று இந்த வருடம் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து பெரும்பாலான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து கொண்டனர். இவ்வாறு பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பாக நிர்வாக அலுவலர், செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, பூசாரிகள் போன்றோர் செய்திருந்தனர்.
அதேபோன்று வத்திராயிருப்பு பஜாரில் உள்ள முத்தாலம்மன், மேலப்பாளையத்தில் அமைந்துள்ள மந்தை மாரியம்மன், மேலத் தெருவில் உள்ள சந்தன மாரியம்மன், வடக்கு தெருவில் உள்ள வடக்காட்சி அம்மன், தாணிப்பாறை விலக்கில் அமைந்துள்ள அம்மச்சியார் அம்மன் உட்பட பல்வேறு பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் ஆலங்குளம் ஏ.லட்சுமிபுரம், மாதாங்கோவில்பட்டி, சுண்டங்குளம், நரிக்குளம், காளவாசல் போன்ற கிராமங்களில் உள்ள காளியம்மன் கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.