ஆதித்தமிழர் பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டதாவது, பாளையங்கோட்டை அம்பேத்கர் நகரில் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 366 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வீடுகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மேற்கூரை இடிந்து காணப்படுகிறது.
இதனால் அந்த வீட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தினரும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வீடுகளில் எங்களுக்கு போதுமான வசதி இல்லாததால் அதை இடித்துவிட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் குழந்தைகளின் கல்வி நலன் கருதி வாடகை வீட்டில் வசிக்கும் அருந்ததியர் இன மக்களுக்கு சமாதானபுரம், பெரிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடம் ஒதுக்கி தர வேண்டும். அதன்பின் அம்பேத்கர் நகரில் 800க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் இருப்பதால் ரேஷன் கடைகள் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.