மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி சந்தியூர் முதல் வீதியில் குமார்-ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் குமார் வனத்துறை பார்வையாளராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் குமார் தற்போது ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள வனத்துறை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதில் ஐஸ்வர்யா அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தாயார் ராணி ஐஸ்வர்யாவை கண்டித்துள்ளார். இதனையடுத்து ராணி கடைக்கு சென்றுவிட்டார். அதன்பின் சிறிது நேரத்தில் ராணி வீடு திரும்பிய போது அங்கு ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனைதொடர்ந்து ராணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஐஸ்வர்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் ஐஸ்வர்யாவின் சடலத்தை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.