ஆடி மாதத்தை முன்னிட்டு நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடிமாதம் பிறந்ததை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் உட்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் பெரும்பாலானோர் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாகர்கோவிலில் நாகராஜா கோவிலுக்கு பக்தர்களின் அதிகமாக வந்தனர். இதனையடுத்து அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இவ்வாறு கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜனை வழிபட்டனர். அதன்பின் அனைத்து பக்தர்களும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த கோவிலில் நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபடுவது முக்கியமான ஒன்றாக இருப்பதால் வழிபாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.