Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை தேவைகளுக்காக ஏங்கி தவிக்கும் இருளர் இன மக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அடிப்படை வசதிகளுக்காக ஏங்கித் தவிக்கும் இருளர் இன மக்களின் அவல வாழ்க்கையை விவரிக்கும் ஒரு செய்தித் தொகுப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பூதக்குலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்காக தாங்களாகவே மண் பாதையை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வேண்டும் என்றால் அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் விளைநிலங்களுக்கு  சென்று தான் எடுத்து வர வேண்டும். ஆனால் அதற்கும் சில நிபந்தனைகள் உண்டு.

விளைநிலங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுத்து செல்ல அதன் உரிமையாளர்கள் அனுமதிப்பதாக கூறப்படுகிறது. விவசாய வேலைக்கு செல்லா விட்டால் குடிநீர் கிடைக்காது என்பதால் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருவதாக கண்ணீர் வடிக்கின்றன. மலை கிராமத்தில் இருந்த இரண்டு தெரு விளக்குகள் பழுதாகி பல மாதங்களாகியும் சரி செய்யப்படாததால் இருளிலேயே காலத்தைக் அளிப்பதாக  குற்றம் சாட்டும் மக்கள், இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களால் ஆபத்துகளை எதிர் கொண்டு அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தாலும், சாதி சான்று வழங்கப்படாததால் உயர்கல்வி என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே இருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பனை ஓலையில் கூரை அமைத்து குளிரிலும், மழையிலும் குழந்தைகளுடன் நடுங்கிக்கொண்டு வாழும் தங்களை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் அனுமதிக்காமல் பொய் வழக்குப்போட்டு மிரட்டி வருவதாகவும், இதனால் பிழைப்புத்தேடி வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருவதாகவும் கூறும் இருளர் இன மக்கள், அரசின் எந்த வித திட்டங்களும் சலுகைகளும் தங்களுக்கு கிடைப்பது இல்லை என்று கண்ணீர் வடிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தங்களின் நிலையை நேரில் ஆய்வு செய்து வீட்டுமனை பட்டா, இலவச வீடு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை இருளர் இன மக்களின் கோரிக்கை.

Categories

Tech |