கேரளாவில் ஆதிவாசி தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்ததால் அவர் குடும்பத்தோடு மகிழ்ச்சியில் இருக்கிறார்.
கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கமான ஓன்று. அதன்படி ஏதாவது பண்டிகை என்று வந்துவிட்டால் பம்பர் குலுக்கல் நடைபெறும். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு மற்றும் ஓணப்பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல் கட்டாயம் நடைபெறும். அந்த வகையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது.
இதில் கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு பகுதியில் இருக்கும் ஆதிவாசி காலனியை சேர்ந்த ராஜன் என்ற தொழிலாளிக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏன் அவரே நினைத்து பார்த்திருக்காத வகையில் முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிவிட்டார். பின்ன இருக்காதா என்ன?.. ஒரு கோடியா.. இரண்டு கோடியா.. 12 கோடி.
ராஜன் இந்த லாட்டரி சீட்டை வயநாட்டில் உள்ள ஒரு லாட்டரி வியாபாரியிடம் வாங்கியிருந்தார். முதல் பரிசாக ரூ.12 கோடி பெற்ற ஆதிவாசி தொழிலாளி ராஜன், அதிர்ஷ்ட சீட்டை அருகிலுள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்தார்.
12 கோடி பரிசு கிடைத்தது பற்றி வெற்றியாளர் ராஜன் கூறுகையில், நான் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கமாட்டேன். எப்போதாவது என்னிடம் பணம் இருந்தால் லாட்டரி சீட்டு எடுப்பேன். அப்படிதான் நான் இந்த சீட்டையும் வாங்கியிருந்தேன். ஆனால் அதற்கு முதல் பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களின் எதிர்கால செலவுக்கு நான் இந்த பணத்தை செலவு செய்வேன் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.