கொரோனா பாதிப்பால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, தற்போதுவரை ஏழாவது கட்ட நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரது குடும்பத்தில் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க பணம் இல்லாததால், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை இந்த ஆண்டு சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருவதாக ஆதாரபூர்வமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2020-21 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1முதல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை 5.50 லட்சம் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதே போன்று பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டினால், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளியும் வளரும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.