ஜூன் 12 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது .
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், இரட்டை தலைமையால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.
இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு ஜெயலலிதாவைப் போல் ஆளுமைத் திறன் கொண்ட ஒற்றை தலைமை தேவைப்படுகிறது என்று எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ,இது கடும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து ஜூன் 12ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என்று அதிமுக தலைமைக் குழு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்தும் ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டு குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.