செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி.சண்முகம், அதிமுக அலுவலகம் முழுமையாக அடித்து உடைத்து சூறையாடப்பட்டிருக்கிறது, கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது, ஆவணங்கள் திருடுபோய் உள்ளது. அதிமுக அலுவலகம் ஜானகி அம்மையாரின் கட்டடம். இந்த இயக்கத்திற்காக தானமாக கொடுக்கப்பட்ட கட்டிடம். அந்த பத்திரத்தையே ஓ பன்னீர்செல்வம் திருடி சென்று இருக்கிறார்.
அவர் சொல்கிறார் என் வீட்டில் நான் திருடுவேனா என்று ? உங்கள் வீடாக இருந்தாலும் நீங்கள் திருடினால் குற்றம் குற்றம் தான், திருடன் திருடன் தான். இது உன் அப்பன் வீட்டு சொத்தல்ல. இது அண்ணா திமுகவினுடைய சொத்து, வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும், நீங்கள் அந்த சொத்தினுடைய உரிமையாளர்கள் கிடையாது, ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நீங்கள் அதற்கு பாதுகாவலர்கள் தான், அங்கு இருக்கின்ற ஆவணங்களை நீங்கள் சரிபார்க்கலாம், ஆனால் அதை எடுத்து செல்வதற்கு உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.
இப்படி தெள்ளத் தெளிவாக ஒரு குற்றத்தை நிகழ்த்தி இருக்கின்ற இந்த குற்றவாளிகள் மீது இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 32 காலம் ஆண்ட ஒரு இயக்கத்திற்கு இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுடைய நிலைமை என்ன என்பதை தயவு செய்து நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் ?
அதிமுக அலுவலக சம்பவத்தில் வேறு ஏதாவது குற்றங்கள் நடந்திருந்தால் அதற்கு முழுக்க முழுக்க தமிழகத்தினுடைய காவல்துறையே பொறுப்பு. உங்கள் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.32 ஆண்டு காலம் ஆட்சி கட்டலில் இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கே இந்த நிலைமை என்றால், சாதாரண அடித்தட்டு மக்களுடைய நிலைமை என்ன என்பதை நன்றாக இந்த மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.