எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் பலத்தோடு இருக்கின்றார். அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டால் சசிகலாவை கட்சியின் சேர்க்க தலைமை முடிவு எடுக்கும் என ராஜன் செல்லப்பா கூறியது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,
என்னுடைய பார்வையெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் இயக்கம். ஏழை எளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இதை புரட்சித் தலைவர் தொடங்கினார்.
இந்த இயக்கம் ஏறத்தாழ 50 ஆண்டுகால வரலாற்றில், 32 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட கட்சியை வழிநடத்தக் கூடியவர் புரட்சித்தலைவருக்கு பிறகு, புரட்சித்தலைவி அம்மா வந்தார்கள், அதற்கு அடுத்து இப்போது அண்ணன் எடப்பாடியார் வந்திருக்கிறார். இந்த இயக்கம் நூறாண்டு காலம் இருக்க வேண்டும் என்பது புரட்சித்தலைவருடைய, அம்மாவுடைய எண்ணம்.
மக்களுடைய இயக்கமாக, மக்களுக்கு பயன்பெறக்கூடிய இயக்கம் எதுவென்றால், உண்மையான மக்கள் இயக்கம் எதுவென்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று அம்மா அவர்கள் சூளுரை அளித்திருக்கிறார்கள். இந்த இயக்கத்திற்கு எது நல்லது ? எது கெட்டது ? என்பதை அண்ணன் எடப்பாடி அவர்கள் செய்வார்கள், நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது, அதை செய்வார் என்று நான் ஏற்கனவே பலமுறை பேட்டியில் சொல்லி இருக்கிறேன். இந்த இயக்கம் ஆளுங்கட்சியாக மீண்டும் வரவேண்டும், தொண்டர்களை அரவணைத்து செல்ல வேண்டும், அதை செய்வார் என்று தான் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் என தெரிவித்தார்.