முன்விரோத காரணத்தினால் வாலிபர் மீது பாறாங்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவினாசி கண்டிகை பகுதியில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பச்சையம்மன் கோவில் அருகில் மர்மமான முறையில் அருண் இறந்து கிடந்துள்ளார். அதன்பின் மது போதையில் கீழே விழுந்து இருந்திருப்பார் என நினைத்து குடும்பத்தினர் அவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து அருண் சாவில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தினால் அவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புதைக்கப்பட்டிருந்த அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிறகு பரிசோதனை அறிக்கையில் அருண் கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாயாண்டி, தரணி மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அருணை கொலை செய்ததாக கூறியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, தரணி உள்பட 3 பேரும் சம்பவத்தன்று அவினாசி கண்டிகையில் இருக்கும் நீர்நிலைகளில் மீன் பிடிப்பதற்காக வலை விரித்து விட்டு காத்திருந்ததாகவும், அந்நேரம் அங்கிருந்த அருணுக்கும் சந்தோஷ்க்கும் இடையே இருந்த நிலப் பிரச்சினை முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த சந்தோஷ் பாறாங்கல்லை எடுத்து அருண் மார்பு மீது போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க கொலை செய்ய பயன்படுத்திய கல்லை இருசக்கர வாகனத்தின் மூலமாக எடுத்துச் சென்று புதர் மறைவில் போட்டு விட்டு 3 பேரும் தப்பி சென்றுள்ளனர். பின்னர் பிடிக்கபட்ட மூன்று நபர்கள் இடமிருந்தும் இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதற்கு பிறகு கொலைக்கு பயன்படுத்திய பாறாங்கல்லை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிருந்த நிலையில் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.