அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்புப் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயால் பெண் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் வங்குடி தெருவில் வள்ளி என்பவர் தன் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்துவிட்டார். அதனால் இவர் கூலித்தொழில் செய்து தன் குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று வள்ளி தனது குழந்தைகளுக்கு சமைப்பதற்காக அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தார். அப்போது அருகிலிருந்த மண்ணெண்ணெய் கேன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் அவருடைய சேலையில் தீப்பற்றியது. உடனே அந்த தீயானது அவர் உடல் முழுவதும் பரவ தொடங்கியது.
இதனையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்குள்ள அக்கம் பக்கத்தினர் உடனே வந்து பார்த்து தீயை அணைத்தனர். அதன்பிறகு வள்ளியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வள்ளிக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்கமால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து வள்ளியின் உறவினர் சிவானந்தம் என்பவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.அந்த தகவலின்படி விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .