சத்தியமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள முல்லை நகரில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தீயணைப்புத்துறை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ராமபிரியா என்ற மனைவி இருக்கின்றார். இதில் ராமப்பிரியா தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அடுத்த வீதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ராமபிரியா மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து ராமப்பிரியா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் சங்கிலி, கம்மல், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதேபோன்று ராமபிரியாவின் அடுத்த வீட்டில் அய்யம்மாள் வசித்து வருகிறார். இவர் கடம்பூரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதன்பின் அய்யம்மாள் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அய்யம்மாள் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் ஈபி காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எந்திரம் வைத்து தோசை மாவு அரைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள தன்னுடைய குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் முருகன் சென்றுவிட்டார். இந்நிலையில் முருகனுடைய வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். ஆனால் முருகன் வீட்டில் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இவ்வாறு சத்தியமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.