ரயில் முன் பாய்ந்து என்ஜினீயர் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் ஜெகன் என்ஜினீயரிங் படித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். மேலும் ஜெகனின் பாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இதனால் ஜெகன் மிகுந்த மன வேதனையில் இருந்த நிலையில் காட்பாடி ரயில் நிலையம் அருகில் ஆலப்புழையில் இருந்து தன்பாத் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.