சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. 4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து “பேஷரம் ரங்” எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலில் நடிகை தீபிகா படுகோன் பிகினி உடையில் மிக கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார்.
இதில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து இருப்பது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக இந்து மத அமைப்பினர் பலர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோன்று தீபிகா காவி நிறத்திலும், ஷாருக்கான் பச்சை நிறத்திலும் உடை அணிந்திருப்பது 2 மதங்களை குறிக்கும் அடிப்படையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இத்திரைப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என இந்துமத அமைப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில் பதான் திரைப்படத்தில் அந்த பாடல் உள்பட பல காட்சிகளில் திருத்தங்கள் செய்யுமாறு சென்சார் போர்டு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை செய்து திருத்தப்பட்ட பதிப்பை சமர்ப்பிக்குமாறு பட தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது..