கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை மீண்டும் திறக்கப்பட்டு 95% மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தை தமிழக அளவில் மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. இதில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 முதல் 900 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு விற்பனைக்கு கொண்டு வரும் மாடுகளை தமிழக வியாபாரிகள் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் போன்ற வெளிமாநில வியாபாரிகளும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விலைபேசி வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதிக்குப் பின் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை அடைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி கால்நடை சந்தைகள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கிய பின் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை திறக்கப்பட்டு விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அங்கு 30 எருமை மாடுகள் மற்றும் 120 பசு மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் எருமை மாடு ஒன்று 35 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையும், பசுமாடு ஒன்று 35 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து மாட்டுச்சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறியபோது சந்தை திறப்பதற்கு அரசு திடீரென அனுமதி வழங்கியதால் ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை. இதனால் குறைவான மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 95 சதவீதம் விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரும்போது கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா மாதிரி பரிசோதனை சான்று தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. எனவே அடுத்த வாரம் வெளிமாநில வியாபாரிகள் சந்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.