கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக உள்ளது.
மேலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறி வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக ஆளுநரை சந்திக்க உள்ளார். இன்று மாலை நடைபெறும் சந்திப்பின் போது, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநருடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்று தொடா்பாக தமிழக அரசு இதுவரை எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆளுநா் புரோஹித்திடம் முதல்வா் பழனிசாமி வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.