ஸ்விட்சர்லாந்து அரசு ஆற்றலை சேமிக்க தங்கள் மக்களுக்கு சில வழிமுறைகளை கூறியிருக்கிறது.
ஸ்விட்சர்லாந்து நாட்டில் இப்போது ஆற்றல் பற்றாக்குறை இல்லை. எனினும் ஆற்றலை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்திவிட்டு, சேமிக்க வேண்டும் என்று ஆற்றல் துறை அமைச்சராக இருக்கும் Simonetta Sommaruga கூறியிருக்கிறார். சில நாட்கள் ஆற்றல் பற்றாக்குறை உண்டானாலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு 100 பில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் இழப்பு உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கம் ஆற்றலை சேமிக்கும் சில வழிமுறைகளை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி, வீட்டை 20 டிகிரியை தாண்டி வெப்பப்படுத்த கூடாது, வெப்பநிலையை ஒரு டிகிரி குறைத்தாலே 10% சேமிப்பாகும். சமையல் செய்யும்போது, பாத்திரங்களை அடைத்து வைக்க வேண்டும்.
திறந்து வைத்து சமைக்கும் போது அதிகமான ஆற்றல் வெளியாகும். வீட்டில் ஒரு அறையை விட்டு வெளியேறினால், அந்த அறையில் இருக்கும் அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். கணினி உட்பட அனைத்து உபகரணங்களையும் சரியாக அணைக்க வேண்டும். பயன்படுத்தாத சமயங்களிலும் உபகரணங்கள் அணைக்கப்படாமலேயே இருப்பது ஆற்றலை வீணாக்கும்.
குளிப்பதற்கு தொட்டிகளை உபயோகிப்பதற்கு பதிலாக ஷவரில் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு 37 டிகிரிக்கும் குறைந்த நீரை உபயோகப்படுத்துங்கள். அது, உடலுக்கும் நல்லது. ஆற்றலையும் சேமிக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.