கொரோனாவால் ஏற்பட்டுவரும் மரணங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அதிக அளவில் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர்.
பொதுவாக 40 வயதை தாண்டியவர்கள் தான் அதிக அளவில் ஆயுள்காப்பீடு எடுப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் தற்போது 25 முதல் 35 வயதினரிடையே ஆயுள் காப்பீடு எடுப்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சம் அடைந்தது. இந்த சமயத்தில் 25 முதல் 35 வயது ஆண்களின் ஆயுள் காப்பீடு பாலிசி எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாலிசி பஜார் என்ற மிகப்பெரிய ஆன்லைன் காப்பீடு ஒருங்கிணைப்பு தளம் கூறுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்கான ஆயுள் காப்பீடு எடுப்பதில் மே மாதத்தில் 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக மற்றொரு முன்னணி காப்பீட்டுத் தளம் கூறுகிறது. 2020இல் முதல் அலை அமெரிக்காவில் உச்சம் அடைந்த போது அங்கு ஆயுள் காப்பீடு விண்ணப்பங்கள் 4 சதவீதம் அதிகரித்து இருந்தது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு பாலிசிகள் பற்றி அலட்சியம் காட்டியவர்களும் கொரோனா அதிகரித்த பின் அவற்றை எடுப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3.79 லட்சமாக உள்ளது.