காவல் அதிகாரியின் இறுதிசடங்கில் குண்டுவெடித்து 40 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகின்றது. நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பொதுமக்களை குறிவைத்து பயங்கரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்நாட்டு ராணுவத்தினர் இந்த தலிபான் பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
உள்நாட்டில் இருக்கும் படையினருக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படையினருக்கும் அவ்வப்போது மோதல் நடந்து வருகின்றது. இதனிடையே அந்நாட்டின் ஹுவா மாவட்டத்தின் மூத்த காவல் அதிகாரி ஹஜி ஷேக் நேற்று இரவு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு இன்று நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் திடீரென சக்திவாய்ந்த குண்டு ஒன்று இறுதி சடங்கு நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்து 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் அரசு இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் காரணமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.