திரைப்பட இயக்குனர் சஹ்ரா கரிமி எழுதிய கடிதமானது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் முழுவதுமாக விலக்கிக் கொண்டதையடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. அவர்கள் தலைநகர் காபூலை கைப்பற்றியதால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களிடையே சென்றது. இந்த நிலையில் தலீபான்களால் ஆப்கானைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அந்நாட்டின் திரைப்பட இயக்குனரான சஹ்ரா கரிமி என்பவர் திரையுலகத்தில் இருப்பவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது “நான் இதை மிகவும் உடைந்த இதயத்துடன் எழுதுகிறேன். என் அழகிய தாய் நாட்டைக் காப்பாற்றுவதற்காக அனைவரும் என்னுடன் சேர்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
எங்கள் மக்களை தலீபான்கள் கொன்று வருகின்றனர். மேலும் பல குழந்தைகளை கடத்தியுள்ளனர். ஒரு பெண்ணை உடையை காரணமாக வைத்து கொன்றுள்ளனர். திரையுலகில் உள்ள நகைச்சுவை நடிகை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவரைக் கொன்று விட்டனர். மேலும் பொதுமக்கள் கவிஞர்கள் உட்பட அனைவரையும் கொன்று வருகின்றனர். எங்களில் சிலர் பொது இடங்களில் வைத்து தூக்கிலிடப்பட்டனர். பல்லாயிரகணக்கான குடும்பங்களை இடம் விட்டு இடம் மாற்றியுள்ளனர். அவர்கள் காபூலில் உள்ள முகாம்களில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அங்குள்ள குழந்தைகள் பால் பற்றாக்குறை காரணமாக தவித்து வருகின்றன. நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். ஆனால் உலகம் இதனைக் கண்டு அமைதியாக உள்ளது. இதற்கு நாங்கள் பழகிவிட்டோம். ஆனாலும் இது நியாயமானதன்று. நான் ஒரு திரைப்பட இயக்குனராக இருக்கிறேன். எனது அனைத்து கடின உழைப்புகளும் வீழ்ச்சியடைய உள்ளன. ஒருவேளை தலீபான்கள் ஆட்சியைப் பிடித்தால் எங்களுடைய அனைத்து கலைகளையும் தடை செய்து விடுவார்கள். நானும் மற்ற திரை கலைஞர்களும் அவர்களின் இலக்குக்கு ஆளாவோம்.
மேலும் தலீபான்கள் பள்ளிக்கூடங்களை அழித்து இதுவரை இரண்டு மில்லியன் பெண் குழந்தைகளை அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் ஆகிவிடும். இந்த கடிதத்தினை தயவுசெய்து திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் அனைவரும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களை பற்றி சமூக ஊடகங்களில் எழுதுங்கள். எங்களுக்கு தேவையான ஆதரவை குறிப்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், குழந்தைகள், கலைஞர்களுக்கு அளியுங்கள்.
உங்களின் குரலும் ஆதரவும் எங்களுக்கு தேவை. இந்த நிகழ்வானது காபூலில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பாக நடக்க வேண்டும். அதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது” என்று அந்த கடிதத்தில் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்த கடிதமானது தலீபான்கள் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து சமூக ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.