அதிகார கைமாற்றத்திற்கு அதிபர் அஷ்ரப் கனி முன்வந்துள்ளதாக ஆப்கான் உள்விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தலைநகர் காபூல் தலீபான்களால் கைப்பற்ற நேரும் என்பதால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமின்றி தலீபான்கள் முக்கிய பகுதி ஒன்றையும் கைவசப்படுத்தி தலைநகரையும் கைப்பற்ற தயாராகிவிட்டனர். இருப்பினும் தலைநகர் காபூலை வற்புறுத்தி கைப்பற்ற மாட்டோம் என்று தலீபான்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அதிகார கைமாற்றத்திற்கு முன்வந்துள்ளதாக உள்விவகாரத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் மிர்சாக்வால் தகவல் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகும் நிலை உருவாகும். எனவே அதிகாரக் கைமாற்றம் அமைதியான முறையில் நடைபெறும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தலீபான்கள் மறுப்புத் தெரிவித்ததுடன் அதிகாரத்தை எங்களால் பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். மேலும் அதிபர் அஷ்ரப் கனி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.