ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தொலைக்காட்சி நிருபரை கடத்தி சென்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தாலுள்ள தாகர்,ஜவ்ஜான், நிம்ரோஸ் போன்ற மாகாணங்களை கைப்பற்றிய நிலையில் தற்பொழுது குந்தூஸ் மாகாணத்தையும் கைவசப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் காபூலில் உள்ள தேஹ் சப்ஸ் மாவட்டத்தில் பக்தியா காக் வானொலி நிலையம் அமைந்துள்ளது. இதன் தலைமை ஆசிரியரான தூஃபான் ஒமாரி நேற்று கொல்லப்பட்டார்.
இவரின் இறப்பிற்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனை தொடர்ந்து ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள கர்கத் தொலைக்காட்சியின் நிருபர் நியமதுல்லா ஹேமத்தை தலீபான்கள் பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். இது குறித்து ஹெல்மண்ட் மாகாணத்தின் பொறுப்பாளர் கெய்ராத்மல் தகவல் தெரிவித்துள்ளார். அதில் “நியமதுல்லா ஹேமத் அவரின் வீட்டிலிருந்து தலீபான்களால் இழுத்துச் சென்று சிறை பிடிக்கப்பட்டுள்ளார். நான் ஊடகங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மேலும் அவரை சீக்கிரம் விடுவிக்க தலீபான்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.