அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா ஆப்கானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற முக்கிய உரிமைகள் பறிபோகும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பெண் பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நுழைந்த தலீபான்களினால் அங்குள்ள பெண்கள் பள்ளிக் கூடத்திற்கு செல்வது தடை செய்யப்பட்டது.
அன்று நான் என் பள்ளி, வகுப்பறை போன்றவற்றை காண முடியாமல் போய் விடுமோ என்றும் இனிமேல் புத்தகங்களை தொட முடியாதோ என்ற அவ நம்பிக்கையும் என்னிடம் இருந்தது. அதே நிலைமைக்கு இன்று ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகள், இளம் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்களின் எதிர்கால கல்வி குறித்து கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் இவர் தனது 15 வயதிலேயே தலீபான்களின் தடையை மீறி பள்ளிக்குச் செல்லும்போது கடந்த 2012ல் அவர்களால் சுடப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து மலாலா உயிர் தப்பித்தார். இருப்பினும் அவர் முகத்தில் இன்னும் அந்த காயங்களை காண முடியும். அவர் தலீபான்களின் கோர முகத்தை நேரில் கண்டவர். கடந்த 2014ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். மேலும் பெண்களின் உரிமைக்காக சிறுவயதிலேயே தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். இதனை கண்டு தான் தலீபான்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.