ஆப்கானை விட்டு வெளியேறும் மக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உறுதி அளிக்கும் விண்ணப்பம் பெறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி மற்ற நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கா மக்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு கொடுப்பதாக உறுதியளிக்கும் விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு நபருக்கு 2000 டாலருக்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு 5,000 முதல் 10,000 அமெரிக்கா குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் அனைவரும் அந்நாட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர்கள் அமெரிக்கா ராணுவம் அனுப்பும் விமானங்களில் தான் வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர்கள் வெளியேறுவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக விண்ணப்பம் ஒன்றை அளிக்க வேண்டும். இதற்கிடையில் பென்டகன் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
அதில் “கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் சுமார் 7000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் அமெரிக்கர்கள் யார் அல்லது அமெரிக்கா குடிமக்கள் எத்தனை பேர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள் என்பதை கணித்துக் கூற இயலவில்லை. மேலும் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5,000 அமெரிக்கா படைகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் காபூலில் உள்ளவர்களை மீட்க அனுப்பப்பட மாட்டார்கள். ஒரு வேளை ஆப்கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்த அமெரிக்கர்கள் கட்டாயமாக தலீபான்களின் சோதனை மையங்களை கடந்து விமான நிலையத்திற்கு வர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.